கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள கட்டுப்பாடு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதன்படி, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கப்பட்டது போன்றே ஜூலை மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பிற பொருள்கள் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டது. மேலும், நியாய விலைக் கடைகளில், குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருள்களை பெற்றுச் செல்ல டோக்கன்கள் 6ஆம் தேதி முதல் வீடு வீடாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
அந்தவகையில், ஈரோடு மாவட்டத்திலுள்ள 2500க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது வீடுகளைத் தேடிச் சென்று நியாய விலைக் கடை ஊழியர்கள் டோக்கன்களை வழங்கி வருகின்றனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து நியாய விலைக் கடை ஊழியர்களும் கடந்த இரண்டு நாட்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் டோக்கன்களில் அவர்களுக்கு பொருள்கள் வழங்கும் தேதியை குறிப்பிட்டு விநியோகித்தனர்.
இந்த டோக்கன் விநியோகம் ஜூலை 9ஆம் தேதி வரை வழங்கப்பட்டு, வருகின்ற 10ஆம் தேதி முதல் விலையில்லா அரிசி, அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி மாநிலம் முழுவதும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சாத்தான்குளம் வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறது' : ஜி.கே.வாசன்