ஈரோடு அருகே வெண்டிபாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதி சேலம், திருச்சி, மதுரை ரயில்கள் செல்லும் பகுதியாக உள்ளதால் இப்பகுதியில் இரண்டு ரயில்வே கேட்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்களது தேவைக்காக பிரதான சாலைகளுக்கோ, நகரத்திற்கோ செல்வதற்கு ரயில்வே கேட்களைக் கடக்க வேண்டியதுள்ளது.
வெண்டிபாளையம் வழியாக கரூர் பிரதான சாலையைப் பிடிப்பது மிகவும் எளிது என்பதால் நகரத்தைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் பெரும்பான்மையானோர் அவசரத் தேவைகளுக்கு இவ்வழியைப் பயன்படுத்திவருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மார்க்கமாகச் செல்லும் ரயில்வே கேட்டில் பழுது நீக்கப்பட்டு வருவதால் அவ்வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெண்டிபாளையத்தின் மறுபுறத்தில் அமைந்துள்ள ரயில்வே கேட் வழிப்பாதையை கரூர் பிரதான சாலைக்குச் செல்வோர், ஈரோடு மாநகரத்திற்குச் செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
திருச்சி,மதுரைக்குச் செல்லும் சரக்கு ரயில்களும், பயணிகள் ரயில்களும் அதிகளவில் செல்வதால், இந்த ரயில்வே கேட்டை கடக்க வாகன ஓட்டிகள் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.