ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி எஸ்.ஆர்.டி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசேகர். பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான இவர் புஞ்சைபுளியம்பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 24 ஆம் தேதி அவருக்கு சொந்தமான கார் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் காருக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடினர்.
இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், சம்பவ இடத்திலிருந்து அழைக்கப்பட்ட செல்போன் இணைப்புகளை ஆய்வு செய்தும், காருக்கு தீ வைத்தவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் புஞ்சைப் புளியம்பட்டி சேரன் வீதியைச் சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர் கமருதீன் (வயது31) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 20 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் புஞ்சைப் புளியம்பட்டி காவல் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைத்த பாஜகவினர் 15 பேர் மீது வழக்குப்பதிவு