ஈரோடு: கடந்த சில ஆண்டுகளாக பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் ஆண்டுதோறும் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டுகிறது. இதன் காரணமாக அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிக உபரி நீர் திறக்கப்படுகிறது.
அப்போது பவானி ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுகிறது.
பவானி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடு கட்டித் தருதல் மற்றும் வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பவானிசாகர் அணையிலிருந்து சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலம் வரை 15 கி.மீ., தூரத்திற்கு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள வீடுகள், விவசாயம் செய்து வருவோருக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறியதாவது, “பேரிடர் காலங்களில் பவானி ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் பவானி ஆற்றை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பவானி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பவானிசாகர் அணை முதல் சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலம் வரை 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆற்றின் இரு கரைகளிலும் தாழ்வான பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருப்போர் மற்றும் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்வோர் என 85 பேருக்கு தற்போது பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பை அவர்களாகவே அகற்ற வேண்டுமென நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் உயர் அலுவலர்களின் உத்தரவின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கால் தவிக்கும் மக்கள் - ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்க அனுமதி!