ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போடப்படும் தகவல்கள் குறித்து முறையாக அறிவிக்கப்படுவதில்லை எனக்கூறி, வாய்க்கால்ரோடு பகுதியிலுள்ள நகராட்சி ஆணையர் ராமசாமி வீட்டின் முன்பு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தடுப்பூசி எப்போது போடப்படுகிறது ?
அப்போது அவர்கள் கூறியவை, "கோபிசெட்டிபாளையம் வாய்க்கால்ரோடு பகுதியில் நகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநோயாளிகள் தவிர, கரோனா பரிசோதனை செய்யப்பட்டும் தடுப்பூசி போடப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி எப்போது போடப்படுகிறது? எத்தனை நபர்களுக்கு போடப்படுகிறது? என்று நகராட்சி சார்பிலோ, சுகாதாரத் துறை சார்பிலோ எந்த அறிவிப்புகளும் முறையாக வெளியிடுவதில்லை.
மன அழுத்தம்
இந்தத் தகவல்கள் தெரியாததால் 200 நபர்களுக்கு போடப்படும் தடுப்பூசிக்கு, 500 முதல் 600 நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அவ்வாறு நீண்ட நேரம் காத்திருந்தும் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி போட்டுவிட்டு மீதமுள்ளவர்களைத் திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.
இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து திருப்பி அனுப்புவதால், மன அழுத்தம் ஏற்படுகிறது. கோபிசெட்டிபாளையம் நகர்ப்பகுதி மட்டுமின்றி அனைத்துப் பகுதிகளிலும் கரோனா தடுப்பூசி போடப்படும் முழு விவரங்களை முறையாக அறிவிக்க வேண்டும்" எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டின் முன்பு பொதுமக்கள் முற்றுகையிட்டதைக் கண்டு வெளியில்வந்த நகராட்சி ஆணையாளர் ராமசாமி 'தனக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது சுகாதாரத்துறை சம்பந்தப்பட்டது' எனக்கூறி திருப்பி அனுப்பி வைத்தார்.
இதனால் இந்தப் பிரச்னையை யாரிடம் கூறுவது எனத் தெரியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.