தமிழ்நாடு அரசின் கரோனா சிறப்பு நிதி திட்டத்தின் மூலம் கரோனா நகை கடன் திட்டம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் வழங்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணி, ஈ.எம்.ஆர். ராஜா, மாவட்ட ஆட்சியர் கதிரவன், எஸ்.பி. சக்திகணேசன் ஆகியோர் கலந்துகொண்டு சுமார் நான்கு லட்சம் ரூபாய்க்கான நகை கடன்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “கரோனா பாதிக்கப்பட்ட நாள் முதல் மக்களுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மேலும் ஈரோடு மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக மாறியுள்ளது. 25 நாட்களுக்கு மேலாக கரோனா தொற்று இல்லா மாவட்டமாக உருவாகி உள்ளது” என்றார்.
மேலும், “அடுத்த ஆண்டிற்கான பாட புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. பள்ளி தொடங்கிய உடனே அவர்களுக்கு பேக், ஷூ வழங்கப்படும். கரோனா பிரச்னை முடிந்த பின்னர் சீருடை தயார் செய்யப்படும். இந்த சூழலில் தனியார் பள்ளிகள் கட்டணங்கள் வசூல் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...மின்சார சட்டத்தை திருத்தும் முடிவையே மத்திய அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்