ஈரோடு மாவட்டம் அறச்சலூர் வடுகபட்டியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவுசெய்யப்பட்டு நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் அறச்சலூர் வடுகபட்டியில் தரிசு நிலங்களில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்றும் இதற்காக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது என்று அப்பகுதி விவசாயிகளின் சார்பில் கோரிக்கைவிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன் விவசாயிகள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் வடுகபட்டியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான பணிகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்துவதாகக் கூறி அப்பகுதி விவசாயிகள் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரைக் கண்டித்தும் விவசாய நிலத்தை அழித்து மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தடுத்து நிறுத்தக் கோரியும் நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.