ஈரோடு: தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சுவர்களுக்கு வெள்ளை அடிப்பது வழக்கம். வெள்ளை அடிப்பதற்கு கல் சுண்ணாம்பு, கிளிஞ்சல் சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்பு பவுடர் உள்ளிட்டவைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
கால சூழ்நிலையில் தற்போது கல் சுண்ணாம்பு மற்றும் கிளிஞ்சல் சுண்ணாம்பு பயன்பாடு குறைந்து பவுடர் சுண்ணாம்பு பயன்பாடு அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், பொதுமக்கள் கிளிஞ்சல் சுண்ணாம்பு வாங்கி சுவர்களுக்கு வெள்ளை அடிப்பதற்கு தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் கிளிஞ்சல் சுண்ணாம்பு வியாபாரிகள் முகாமிட்டு கடை அமைத்துள்ளனர். குவியல் குவியலாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த கிளிஞ்சல் சுண்ணாம்பை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். தற்போது ஒரு படி(பண்டைய அளவுகோல்) ரூ.32க்கு விற்கப்படுகிறது. கிளிஞ்சல் சுண்ணாம்பு கடந்த ஆண்டின் விலைக்கே விற்பனை செய்யப்படுவதால் கிளிஞ்சல் சுண்ணாம்பு வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கிளிஞ்சல் சுண்ணாம்பு மூலப்பொருட்களை கேரள மாநிலம், கொச்சியில் இருந்து வாங்கி வந்து சூளை அமைத்து சுண்ணாம்பை பக்குவப்படுத்தி, ஒரு படி 32 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையாக கிளிஞ்சல் சுண்ணாம்பு, சுவர்களில் நன்கு ஒட்டுவதால் தற்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் பிரபல தனியார் ஸ்கேன் மையத்திற்கு சீல்; உரிமம் இல்லாததால் நடவடிக்கை