ஈரோடு: சித்தோடு அருகே எலவமலை, சத்தியா நகரில் உள்ள ஒங்காளியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து கருவறை பீரோவில் இருந்த சாமிக்கு அனுவிக்கப்படும் தாலி உள்ளிட்ட 12 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர் உண்டியலில் இருந்த சுமார் 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த நபர்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
போலீசார் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்துக்கு இடமான நபர்களை சோதனை செய்தும் வந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய வாகன தணிக்கையில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த தேவேந்திரன் என்பவனை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது காளியம்மன் கோயிலில் திருடியது தெரிய வந்தது. திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த தேவேந்திரன் மீது 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் கோயிலில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் 10 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி மற்றும் ரூ.4000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த சித்தோடு காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தேவேந்திரனை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வெண்டைக்காய் விலை வீழ்ச்சி - சாலையில் கொட்டிய விவசாயி