ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகேயுள்ள கமலாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு சங்கர், தினேஷ் என இரண்டு மகன்கள். இருவரும் கூலித்தொழிலாளிகளாகப் பணிபுரிந்தபடி தங்களது பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான சங்கர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி, அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில நாள்களுக்கு முன் சங்கர் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்
அப்போது அதனைத் தடுக்கச் சென்ற தந்தை மனோகரனை சங்கர் மதுபோதையில் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், சங்கரை அடித்துக் காயப்படுத்தியதில் அவர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கர் வீட்டிலிருந்த சகோதரர் தினேஷை சுத்தியலால் கொடூரமான முறையில் பல இடங்களில் தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கருங்கல்பாளையம் காவல் துறையினர் விரைந்து வந்து சங்கரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மனைவி, குழந்தைகள், பெற்றோர் முன்னிலையில் தன்னை அடித்ததால் அவமானம் அடைந்து தனது சகோதரரை பழித் தீர்க்க கொலை செய்ததை சங்கர் ஒப்புக்கொண்டார். பிறகு காவல் துறையினர் அவரைக் கைதுசெய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பிவைத்தனர்.