ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பாலசுப்பிரமணியம் வீதியை சேர்ந்தவர் சாகுல் அமீது (56). இவர் புஞ்சைபுளியம்பட்டி - கோயம்புத்தூர் சாலையில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் எதிர்புறம் மரக்கடை, சித்த வைத்தியசாலை நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு மரக்கடை வியாபாரம் மற்றும் சித்த வைத்தியம் பார்த்த வகையில் ரூ.95 ஆயிரம் பணத்தை மரக்கடையில் உள்ள மேஜை டிராவில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், ஜூன் 29ஆம் தேதி மரக்கடை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சாகுல் அமீது, உள்ளே சென்று பார்த்தபோது ரூ 95 ஆயிரம் திருடு போயிருந்தது.
இது குறித்து சாகுல் அமீது புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மரக் கடையில் இருந்த சிசிடிவி காட்சியை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். சிசிடிவி காட்சியில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மரக் கடையில் புகுந்து மேஜை டிராவை திறந்து பணம் திருடும் காட்சி பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ. 3 லட்சம் கொள்ளை