ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பங்களாபுதூர் உதவி காவல் ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் போலீசார் கொங்கர்பாளையத்தை சேர்ந்த பொன்னம்பலம்(44) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோழிப்பண்ணையின் கூரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பொன்னம்பலத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொங்கர்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி, அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி ஆகியோர் வன விலங்குகளை வேட்டையாடிவிட்டு, துப்பாக்கியை கோழிப்பண்ணையில் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து போலீசாரை கண்டதும் தப்பியோடிய கருப்புசாமி மற்றும் பெரியசாமியை தேடி வருகின்றனர். அதேபோல் கே.என்.பாளையம் அருகே உள்ள சென்றாயன்பாளையத்திலும் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, பங்களாபுதூர் போலீசார் பெரிய சென்றாயன்பாளையம் செங்கரடு வனமாளிகை என்ற இடத்தில் சோதனைக்காக சென்றனர்.
அங்கு போலீசாரை கண்டதும் தப்பியோடிய கே.என்.பாளையம் அம்மன் நகரை சேர்ந்த பூபதி(23) என்பவரை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பூபதி சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்து இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பூபதியை கைது செய்த போலீசார், அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பங்களாபுதூர் காவல் நிலைய பகுதியில் ஒரே நாளில் இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.