ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பகுதியில் வசித்துவருபவர், பானுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் உயிரிழந்த நிலையில் தனது இரண்டு பெண்களுக்குத் திருமணம் முடித்து தனது தங்கையின் வீட்டருகே வாடகை வீட்டில் வசித்துவருகிறார்.
கடந்தவாரம், வீட்டின் வெளியே உட்கார்ந்து அண்டைவீட்டுப் பெண்களுடன் பானுமதி பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த குமார் என்பவர், தனக்கு வீடு வாடகைக்கு கிடைக்குமா எனக் கேட்டுள்ளார். தொடர்ந்து தான் நிதி நிறுவனம் நடத்திவருவதாகவும், பெண்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அங்கிருந்த பெண்களின் எண்ணைப் பெற்றுக்கொண்டு, தன்னுடைய எண்ணையும் கொடுத்துள்ளார். அன்று மாலை பானுமதியை தொடர்புகொண்ட குமார், "தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் அதிகப்படியான கறுப்புப் பணம் என்னிடம் கொடுக்கப்பட்டது" எனப் பேசியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், இதனை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
போலீஸின் ஸ்கெட்ச்
காவல் ஆய்வாளரின் உத்தரவின்பேரில் கவுந்தப்பாடி காவல் துறையினர் பானுமதியிடம், நிதி நிறுவனம் நடத்திவருவதாகக் கூறும் குமாரிடம் சந்தேகம்வராதபடி சகஜமாகப் பேசி வீட்டிற்கு வரச்சொல்லுமாறு கூறியுள்ளனர்.
அதன்படி, குமாரிடம் சகஜமாக பானுமதி பேச, தன்னுடைய நிதி நிறுவனத்தில் வேலை செய்ய ஒரு இளம் பெண் தேவை என்றும், அவ்வாறு இளம்பெண் இருந்தால் உடனடியாக வீட்டிற்கு வருவதாகவும் குமார் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, பானுமதியின் வீட்டில் பதுங்கியிருந்த காவல் துறையினர், பெண் காவலர் ஒருவரை பேசவைத்து அவரை நம்பவைத்தனர். அதைநம்பி, அவரும் வந்துள்ளார். ஆனால், காவல் துறையினர் வாகனம் பானுமதியின் வீட்டருகே இருப்பதைக் கண்டு குமார் ஓடிவிட்டார்.
இரண்டு நாட்களுக்குப்பிறகு மீண்டும் பானுமதியைத் தொடர்புகொண்டு வீட்டுக்கு வருவதாகக் குமார் கூறியுள்ளார். பானுமதி அளித்த தகவலின்படி, காவல் துறையினர், குமாரைப் பிடிக்க காரில் காத்திருந்தனர்.
தன்னைப் பிடிக்க பானுமதி திட்டம் தீட்டியதை அறிந்துகொண்ட குமார், பானுமதியை மிரட்டிவிட்டு தப்போயிட முயற்சி செய்துள்ளார். இருப்பினும், தயார் நிலையில் இருந்த காவல் துறையினர் ஒரு கிலோ மீட்டர் தூரம் குமாரை விரட்டிச் சென்று பிடித்தனர்.
பெண்களே உஷார்..!
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவருடைய உண்மையான பெயர் செல்வன் குமார் எனத் தெரியவந்தது.
தறி நெய்யும் தொழில் செய்துவரும் அவருக்கு, திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் உள்ளதும், வறுமையில் உள்ள பெண்களை குறிவைத்து பாலியல் அத்துமீறல், மோசடிகளை தொடர்ச்சியாக செய்துவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செல்வன் குமாரை இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் போலீஸார் அடைத்தனர்.
இதையும் படிங்க: பேராசிரியர் மீது பாலியல் புகார்: சமூக நலத்துறை விசாரணை!