ஈரோடு: ஈரோட்டில் உள்ள வில்லரசம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரிடம் கடந்த 2 வருடங்களாகச் சர்தார் என்பவர் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சர்தாரின் நடவடிக்கை சரியில்லை எனக்கூறி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை வேலையிலிருந்து நீக்கியதாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, சர்தார் மற்றும் அவரது மகன் சபீர் ஆகியோர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ராதாகிருஷ்ணனுடன் இருந்த பழைய இரும்பு கடை வியாபாரி சந்தோஷ் பாண்டிக்கும், சர்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தோஷ் பாண்டி நேற்று முன்தினம் இரவு (நவ.15) பழையபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த சர்தார் மற்றும் அவரது மகன் சபீர் உட்பட 8 பேர் கொண்ட கும்பல், பீர் பாட்டில் மற்றும் கட்டைகளால் சந்தோஷ் பாண்டியைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் நிலைகுலைந்த சந்தோஷ் பாண்டி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள், சந்தோஷ் பாண்டியை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி அளித்துள்ளனர்.
அதையடுத்து மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ் பாண்டி, பின்னர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சந்தோஷ் பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வடக்கு காவல்நிலைய போலீசார், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், பழைய இரும்பு வியாபாரி சந்தோஷ் பாண்டியைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்துள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய வடக்கு காவல் துறையினர், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சர்தார்கான் (40) அவரது மகன் சமீர் (18), சின்னவர் என்கிற அப்துல் ரஹீம் (25), முகமது ரபிக் (22), மோட்டோ என்கிற ரகுமான் (21), அசாருதீன் (26), முகமது யாசின் (20), முகமது ஆசிப் (19) ஆகிய எட்டு நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பழைய இரும்பு கடை வியாபாரி முன்பகை காரணமாகக் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், தந்தை மகன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோவை ராகிங் விவகாரம்; 7 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு!