சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சூசையபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்தனிஸ்லாஸ் என்பவரது 17 வயதான மைனர் பெண்ணும் அதே பகுதியில் வசிக்கும் லியோபிரசாந்த் என்ற இளைஞரும் காதலித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று திருமணம் செய்துகொண்டனர்.
இத்திருமணத்தை மைனர் பெண்ணின் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், பிரசாந்த்தின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் லியோபிரசாந்த் மீண்டும் வீடு திரும்பவில்லை.
கடந்த அக்டோபர் 20ஆம் தேதியன்று மைனர் பெண் தனது கணவர் லியோபிரசாத்துடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி சூசையபுரம் பேருந்து நிறுத்தத்தில் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த தாளவாடி காவல் துறையினர் பெண் மைனர் என்பதால், இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தை அணுகி புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மைனர் பெண்ணின் குடும்பத்தினர், மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து லியோபிரசாந்தை தேடி வந்த நிலையில், லியோபிரசாந்த் சூசையபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தாளவாடி காவல் துறையினர் லியோபிரசாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல் தற்கொலையில் உதிர்ந்த சோகம் !