ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் பகுதியில் வட்டாரப் போக்குவரத்துதுறை, காவல்துறை மற்றும் வனத்துறை சோதனைச் சாவடிகள் உள்ளன. இங்குள்ள வட்டாரப் போக்குவரத்துதுறை சோதனை சாவடியில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகன ஓட்டுநர்களிடமிருந்து, அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சோதனைச் சாவடியில் இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது, சோதனைச் சாவடியில் இருந்த அலுவலர்களிடமிருந்து கணக்கில் வராத பணம் 66 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து சோதனைச் சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசுலோச்சனா மற்றும் வட்டாரப் போக்குவரத்துதுறை சோதனைச்சாவடி ஊழியர்களிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.