ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த ஆறாம் தேதி முதல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை அகில இந்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தொடக்கி வைத்தார். இந்நிலையில், வருகிற 16ஆம் தேதியுடன் இந்த பயிற்சி முகாம் நிறைவடைகிறது. அன்றைய தினம், தனியார் பள்ளி சார்பில் மாணவர்களையும், பெற்றோர்களையும் நிகழ்வில் பங்கேற்க தனியார் பள்ளி நிர்வாகம் நிர்பந்திப்பதாக கூறி அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கும், மாணவர்களை நிகழ்வில் பங்கேற்க வலியுறுத்தியதற்காகவும் தனியார் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து ஜனநாயக அமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடமும் மனு அளித்தனர்.
இதனிடையே, இந்த குற்றச்சாட்டு குறித்து தனியார் பள்ளி கூறுகையில், மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை நடைபெற்று வருவதாகவும், அது போன்று யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.