ஈரோடு மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா, குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (செப். 7) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் நல்லாசிரியர் விருதுகளைப் பெற்ற 13 ஆசிரியர்களுக்குப் பதக்கங்களை அணிவித்து, சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறுகையில், "கரோனாவைக் கட்டுப்படுத்திடும்வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் முகக்கவசம் வழங்கும் திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்திலுள்ள மூன்று லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு 19 லட்சத்து 83 ஆயிரம் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சிறப்பான முறையில் கல்விப்பணியாற்றிய 375 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுபெறும் நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையை அரசு அனைத்துத் துறையினரின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் மேற்கொண்டு, இந்தியாவில் அதிகளவிலான கரோனா பரிசோதனைகளை செய்த மாநிலமாக தமிழ்நாடு சிறப்பு பெற்றுள்ளது. அரசின் நடவடிக்கையால் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சுமார் ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் 11 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. முதல்கட்டமாக ஈரோடு மாவட்டம் பவானி, விருதுநகரில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு கூறும் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்' - விஜயபாஸ்கர்