ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பெருமுகை கிராம ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் நேற்று (டிசம்பர் 29) பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து மகப்பேறு பெண்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விரைவில் அதிமுக தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.
கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தோனி மடுவு மணியாச்சி பள்ளம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு, வனத் துறையிடம் அனுமதி பெறவிருப்பதால், விரைவில் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை போன்று போகிப்பண்டிகையை மாசு இல்லாத வகையில் மக்கள் கொண்டாட வேண்டும்" என்றார்.
மேலும், போகிப்பண்டிகையின்போது ஏற்படும் காற்று மாசு அளவை கண்காணிப்பதற்கான நவீன கருவிகள், நடமாடும் இயந்திரங்கள் சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளது என்றார்.
இதையும் படிங்க: கரோனா தொற்றாளர்களுக்குப் புகை பகையா? - மருத்துவர்கள் விளக்கம்