ஈரோடு: கோழி திருடியதாக பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில், கிராம மக்களை சந்திக்காமல் சென்ற கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் செங்கோட்டையன் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே வெங்கமேடு பகுதியில் உள்ள வீடுகளில் வளர்த்து வந்த கோழிகளை திருடி சென்றதாக கடந்த 21 ஆம் தேதி பட்டியலினத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை ஊர் பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின் அவர்கள் சிகிச்சைக்காக
கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, அவர்கள் மீது திருட்டில் ஈடுப்பட்டது தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கோழி திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மீது சிலர் சிறுநீர் கழித்தும், சாதி பெயரை குறிப்பிட்டும் அவதூறாக பேசியதாக 20 பேர் மீது கடந்த 24 ஆம் தேதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையறிந்த கிராம மக்கள், 20 பேர் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து, கடந்த 25ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் போராட்டங்களை அறிவித்த நிலையில், கடந்த 28ஆம் தேதி கோபி கோட்டாசியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் பிரியதர்ஷினி முன்னிலையில், தனித்தனியாக இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால், இருதரப்பினருக்கும் சுமூக தீர்வு எட்டபடாத நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில், கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருந்திருந்தனர். ஆனால். அவர்களில் 20 பேர் மட்டும் பேச்சுவார்த்தைக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, அவர்களிடம் பேச்சு வார்த்தை முடிந்த பிறகு, சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பொதுமக்களை சந்திக்காமல், அங்கிருந்து பின்புறம் வழியாக வெளியேறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், அவரின் காரை வழிமறித்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கோபி காவல்துறை துணை கண்காணிப்பாளர், இந்த விவகாரம் தொடர்பாக புலன் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை! ஆட்சியை பிடிக்கப்போவது யார்?