மத்தியபிரதேசம் போபால் பகுதியை சேர்ந்த இரும்பு பட்டறைத் தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் சாலையோரங்களில் முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் சாலையோரத்தில் பட்டறை அமைத்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கத்தி, அரிவாள், சோளத்தட்டு வெட்டும் கருவி, அரிவாள்மனை உள்ளிட்ட இரும்பினாலான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் மத்தியபிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர்கள். போபால் மக்களவை தொகுதியில் மே மாதம் 12 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து பட்டறை அமைத்து இரும்பினால் ஆன பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யும் தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக மே 5 ம் தேதி சத்தியமங்கலத்திலிருந்து புறப்பட்டு மத்தியபிரதேச மாநிலத்திற்கு செல்ல உள்ளதாகவும், வாக்களிப்பது ஜனநாயக கடமை எனவும் மே 12 தேர்தல் நாளன்று வாக்களிப்போம் என உறுதிபட தெரிவித்தனர்.
மாநிலம் விட்டு மாநிலம் வந்து குடும்பத்துடன் தங்கி சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் பட்டறை தொழிலாளர்கள் வாக்களிக்கும் கடமையை தவறவிடமாட்டோம் என தெரிவித்திருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.