தமிழ்நாட்டில், கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பொருத்து நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரோடு மாவட்டம் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறி உள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு செல்வதற்கும், வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டத்தில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பவானிசாகர் அருகே உள்ள புங்கார் கிராமத்திற்கு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் திருப்பூரில் இருந்து புங்கார் வந்த ஆறு பேரையும் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தி உள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆறு பேருக்கும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவருக்கும் கட்டில், போர்வை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, வெளி மாவட்டத்தில் இருந்து தாளவாடிக்கு வந்த 17 பேரும், சத்தியமங்கலம் வந்த எட்டு பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதையும் பார்க்க: பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவிய இஸ்லாமிய ஹீரோக்கள்: அலுவலருக்கு நோட்டீஸ்!