ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் வனக்கோட்டத்தில் அரேப்பாளையம் கிராமம் உள்ளது. இப்பகுதி வனத்தில் அமைந்துள்ள பிசில் மாரியம்மன் கோயில் சுயம்பு கற்சிலையை, கடந்த செவ்வாய்க்கிழமை வனத் துறையினர் அகற்றினர். இதற்கு பழங்குடியின மக்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அரேபாளையம் கிராமத்தில் இன்று (அக். 17) கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள், வனத் துறை, வருவாய்த் துறை ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் மீண்டும் அதே இடத்தில் பிசில் மாரியம்மன் சாமி சிலையை வைக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தார்கள்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய வருவாய் கோட்டாட்சியர், மக்களின் கருத்துகள் பதிவு செய்துகொள்வதாகவும், சட்டப்படி இறுதி முடிவு எடுக்க கால அவகாசம் வேண்டும் என்றும், கூடிய விரைவில் இறுதி முடிவை எடுத்து கிராம மக்களிடம் முடிவை தெரிவிப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து வருகிற திங்கள்கிழமை நடைபெற இருந்த பழங்குடியின மக்களின் வழிபாடு போராட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல். சுந்தரம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:2 குழந்தைகளை கொலைசெய்த தாய் கைதான நிலையில் தந்தையும் கைது!