ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர் ஊராட்சியின் கீழுள்ள சென்னனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. செண்பகபுதூரைச்சுற்றியுள்ள கிராமமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் என அனைத்துதரப்பு மக்களும் இங்கு வந்து சிகிச்சைப் பெறுவது வழக்கமாகும். சில நாள்களாக பெய்த மழையால் சுகாதார நிலையத்தைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் சுகாதார நிலையம் மூடப்பட்டது. தற்போது குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் சிகிச்சை பெறமுடியாமல் தவிக்கின்றனர். மேலும் சுகாதார நிலையத்தில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தாமல் தண்ணீர் வடியாமல் இருப்பதால் டெங்கு நோய்ப் பரவ வாய்ப்புள்ளது.
மேலும் கிராமத்தில் உள்ள சாக்கடை வடிகாலில் முட்செடிகள் வளர்ந்து பாதையை அடைத்துள்ளதால் கிராமத்தில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேறாமல் குட்டை போல காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் கவனிக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தி நோய் தொற்றுப் பரவலைத்தடுக்க வேண்டும் என கிராமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஏற்காடு தலைச்சோலை கிராமம் போதைப்பொருள் இல்லாத கிராமமாக அறிவிப்பு