ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சாலையில் கரும்பு வேனை வழிமறித்த காட்டு யானையின் அருகே சென்று ஆபத்தை உணராமல் பயணிகள் செல்பி எடுத்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுகின்றன.
இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் சரக்கு லாரிகளை காட்டு யானைகள் வழிமறித்து லாரியிலிருந்து கரும்புகளை தும்பிக்கையால் பறித்து தின்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது குட்டி யானையுடன் சாலைக்கு வந்த பெண் காட்டு யானை கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை பறித்து தின்றது. அப்போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. யானை நிற்பதை கண்ட பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் இருந்த பயணிகள் காட்டு யானையின் அருகே சென்று தங்களது செல்போன்களில் செல்பி மற்றும் வீடியோ எடுத்தனர்.
காட்டு யானையின் அருகே சென்று ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் செல்பி எடுக்க ஆர்வம் காட்டியதால் யானை பயணிகளை தாக்கும் அபாயம் நிலவியது. இதைத் தொடர்ந்து சிறிது நேரம் நின்றிருந்த காட்டு யானை தனது குட்டியை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
இதையும் படிங்க: சேற்றில் வழுக்கி விழுந்த பெண் யானை உயிரிழப்பு