ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் செண்பகபுதூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தூய்மைப்பணியுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு காவல் பணியையும் பார்த்துவந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு (ஏப். 25) சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்ற பழனிச்சாமி இன்று (ஏப். 26) காலை வீடு திரும்பவில்லை.
காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பணிக்கு வந்த அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரின் அறையில் பழனிச்சாமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பழனிச்சாமியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பழனிச்சாமியின் இறப்பு குறித்து காவல் துறையினர் கூறுகையில், மாரடைப்பு காரணமாக நாற்காலியிலிருந்து எழுந்தபோது கீழே விழுந்ததில் அடிபட்டு ரத்த காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனக் கூறினர்.
எனினும் உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே பழனிச்சாமியின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.