ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19இல் நடைபெற இருக்கிறது. அதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்காகத் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாநகராட்சியில் அதிமுக சார்பாக 55 வேட்பாளர்களும் அதன் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மூன்று பேரும் போட்டியிடுகின்றனர். ஈரோட்டில் தனியார் மஹாலின் உள் அரங்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக, அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள நேற்று ஈரோடு வந்திருந்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை யாராலும் வெல்ல முடியாத எஃகு கோட்டை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே அரசும் குறைசொல்ல முடியாத அரசாகவும் அதிமுக இருந்தது.
திமுக 10 மாத காலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எப்போதும்போல் ஆட்சியை நடத்துகின்றனர். ஆனால் மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
இயற்கைச் சீற்றங்கள், கரோனா காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி செய்தது அதிமுக அரசு. கரோனா மூன்றாவது அலையில் திமுக அரசு மக்களுக்கு ஒரு சாக்லேட் கூட கொடுக்கவில்லை. அதிமுக கொடுத்துப் பழக்கப்பட்ட கட்சி.
ஏன் பொய் சொன்னீர்கள்?
நீட் ரத்துசெய்ய பத்து மாதம் கடந்தும் ரத்துசெய்யவில்லை, பார்க்க வேண்டிய இடத்தில் பார்க்க வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் ரத்துசெய்வோம் என ஏன் பொய் சொன்னீர்கள்? நகை அடகு வைத்தவர்கள் கடனைத் திருப்ப முடியாமல் நடுத் தெருவில் நிற்கின்றனர். காவிரி நீரைப் பங்கிடுவதில் பிரச்சினை 17 ஆண்டுகளாக இறுதித் தீர்ப்பில் வெளியிடவில்லை.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறுதித் தீர்ப்பைப் பெற்றுத்தந்தார். ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினையில் தலையிட்டு அத்திட்டத்தைத் தடுத்தது அதிமுக அரசு. எளிய மக்களுக்கு இலவச மின்சாரம், மின்மிகை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குடும்பத் தலைவன் தலைவியாக வழிநடத்த இருக்கிறார்கள்.
மக்கள் தீர்ப்புக்கான சாதக சூழல்!
மக்கள் சரியான தீர்ப்பை வழங்கும் சாதக சூழல் தற்போது நிலவுகிறது. இந்தத் தேர்தல் தொண்டர்களுக்கானது. தொண்டர்கள்தாம் இயக்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் சக்தி உள்ளவர்கள். இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற வைப்பது உங்களின் தலையாய கடமை.
தற்போதைய ஆட்சி எப்படி உள்ளது என்பதை எடுத்துக் கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும். படிப்படியாக உயரும் வாய்ப்பு அதிமுகவின் மட்டுமே உள்ளது" எனப் பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம், கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பன்னாரி ஜெயக்குமார், அதிமுகவினர் எனத் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சென்னை மாநகரம் மிருகக்காட்சி சாலையா? - மாநகராட்சிக்கு சரமாரி கேள்வி