ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சுவாமிநாதன், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த மரியா செல்வம், ராஜதுரை, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் நிறுவனம் ஒன்றை தொடங்கி பிட்காய்ன், ஆன்லைன் வியாபரம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
குறிப்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தமிழ்நாட்டில்லுள்ள சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பணத்தை வசூல் செய்துள்ளனர். ஏழு ஆயிரம் ரூபாய் முதல் 17 லட்சம் ரூபாய் வரை வழங்கினால் மாதந்தோறும் வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் லாபத் தொகையை விட மூன்று மடங்கு அதிகமான தொகையை 24 மாதத்திற்குப் பின் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
முதல் ஐந்து மாதங்கள் ஒழுங்காக பணத்தை வழங்கிய நிறுவனத்தினர் அதன்பிறகு எவ்வித தொடர்புமின்றி போனதால், முகவர்களிடம் பொதுமக்கள் தங்களது பணத்தை திருப்பித் தர வலியுறுத்தியுள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் தலைமறைவானதால் அதிர்ச்சியடைந்த சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முகவர்கள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தங்கியுள்ள சுபாஷ் சுவாமிநாதனிடமிருந்து தங்களுடைய பணத்தை வாங்கித்தர வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசனிடம் புகாரளித்தனர்.
இதன்பின்பு புகார் மனு அளித்தவர்கள் பேசுகையில், "சேலத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடமிருந்து சுமார் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்களிடமிருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தங்களை நம்பி பணத்தை வழங்கிய மக்களுக்கு உரிய பதிலைக் கூற முடியாமல் பல முகவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். பணத்தை வழங்கியவர்கள் தங்களிடம் பணத்தைக் கேட்டு வற்புறுத்துவதால் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியுள்ளது. இந்த நிலைக்கு காரணமானவர்களைப் பிடித்து பணத்தைப் பெற்றுத்தர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: பாஜக நிர்வாகி கொலையைத் தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர் படுகொலை - திருச்சியில் பதற்றம்!