ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சத்தியமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, சரக்கு லாரி திம்பம் 26ஆவது வளைவில் திரும்பும்போது அதிக பனிமூட்டம் காரணமாக எதிரே இருந்த பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி முகப்பு பகுதி சேதமடைந்தது. இதனால் ஓட்டுநர் லாரியின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் ஓட்டுநரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி பாறை மீது மோதியதில் வெங்காய மூட்டைகள் சாலையில் சிதறி, சாலையின் குறுக்கே லாரி நின்றதால் இரு மாநிலங்களிடையே மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதன்பின் சாலையில் சிதறிய வெங்காய மூட்டைகளை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். சுமார் நான்கு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது. மேலும், சேதமடைந்த வெங்காயத்தின் மதிப்பு ரூபாய் 5 லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: லாரி - கார் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு!