ஈரோடு காவிரி ஆற்றில் தண்ணீர் ஆழம் மிகுந்த மையப்பகுதியில் மூதாட்டி ஒருவர் உயிர் பிழைக்க தண்ணீரில் மிதந்தபடி தவித்துக் கொண்டிருப்பதாகவும், நீண்ட நேரத்திற்குப் பிறகு கரையோரம் மயங்கியபடி ஒதுங்கியிருப்பதாகவும், ஆற்றங்கரையோரப்பகுதி மக்கள் கருங்கல்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், ஊர்க்காவல் படையினரின் உதவியுடன் மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை மீட்டு, அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி, தீவிர சிகிச்சையின் காரணமாக உயிர் பிழைத்தார்.
பின் காவல் துறையினர் மூதாட்டியிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த மூதாட்டி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பதும், பல ஆண்டுகளாக தனக்கு ஆதரவாக இருந்த மகன் தன்னை வீட்டுச் சென்ற மன உளைச்சலினால் தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரியவந்தது.
மேலும், தற்கொலைக்கு முயற்சித்த மூதாட்டிக்கு திடீரென அச்சம் ஏற்படவே, நீரில் மூழ்காமல் வெளியே தவித்தபடி மயக்கமடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்த்த காவல் துறையினர், அவருக்குத் தேவையான பாதுகாப்பைத் தருவதாகவும் உறுதியளித்தனர்.
இதையும் படிங்க:வாரங்கல் கொலை: காதலித்த பெண்ணின் மகள் மீது மோகம்! கொலைக்கான காரணம் வெளியீடு