ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், குண்டேரிப்பள்ளம் அணை சாலையை விரிவாக்கம் செய்யும் முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. அதனால் வாணிபுதூரிலிருந்து வினோபா நகர் வரை 6 கி.மீ. தொலைவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில் கொங்கர்பாளையத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளி ஒருவரின் கடையும் அடங்கும். அவருக்கு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இந்தப் பெட்டிக்கடை வழங்கப்பட்டது. அதனால் அக்கடையை அகற்ற பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் குருமூர்த்தி, வட்டாட்சியர் சிவசங்கர், காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை ஆய்வுசெய்தனர்.
அப்போது அலுவலர் ஆக்கிரமிப்புக் கடைக்காரர்களிடம், "சாலை விரிவாக்கம் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்கு ஒரு ஆண்டு ஆகலாம்.
எனவே அதுவரை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டாம். பணிகள் தொடங்கப்பட்டவுடன் தாங்களாகவே முன்வந்து காலிசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!