இந்தியாவில் காசநோயை ஒழிப்பதற்கு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய அளவிலான காசநோய் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்ள 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, தற்போது நாடு முழுவதும் 20 குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து 625 இடங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரு மருத்துவர் தலைமையில் 23 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்புப் பணியை முடித்துவிட்டு தற்போது ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில் உள்ள தொட்டம்பாளையம் பகுதியில் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கணக்கெடுப்பு குழுவினர் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று காசநோய் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், ரத்தபரிசோதனை, எக்ஸ்ரே, சளி பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்டனர். இந்த ஆய்விற்கென எக்ஸ்ரே, ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பேருந்து பயன்படுத்தப்படுகிறது.
15 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் மட்டுமே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்திற்கு சுமார் ஆயிரம் பேரை பரிசோதித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கணக்கெடுப்புப் பணி முடிந்தவுடன் இதுகுறித்த அறிக்கையை மத்திய அரசின் சுகாதாரத்துறையிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கணக்கெடுப்புக்குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ‘காலியாக உள்ள மருந்தாளுநர்களின் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை!’