ஈரோடு மாவட்டத்திற்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரைசெய்தார்.
சித்தோட்டில் நடந்த இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கொங்கு வேளாளர் சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அவர்களது உரிமைகளைப் பெற்றுத்தந்தவர் கருணாநிதி. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநில, மத்திய அரசுப் பணிகளில் சேருவதற்கு வாசல் அமைத்துத் தந்தவர் கருணாநிதி.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகப் பழனிசாமி என்பவரை நியமித்து ஆணை பிறப்பித்தது. உழவர்களுக்கான தண்ட வரி ரத்துசெய்யப்பட்டது. மாறாக மேற்கு மண்டலம் எங்கள் மண்டலம் எனப் பிதற்றிக் கொள்ளும் அதிமுக அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட முடியுமா? அவர்கள் செய்த சாதனை என்ன தெரியுமா? சரக்கு மற்றும் சேவை வரி ஏற்படுத்தி சிறு, குறு தொழில்களை நசிய செய்தது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து உழவர்களை வேதனைப்படுத்தியது.
எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக உழவர்களைக் கொடுமைப்படுத்தி நிலத்தை அபகரித்தது. மற்ற மாநிலங்களில் சாலையோரத்தில் செல்லும் எரிவாயு குழாய்களை வேளாண் நிலம் வழியாகக் கொண்டுசென்றது. தண்ணீருக்கு வீடு வீடாக மீட்டர் பொருத்தியது. சிறுவாணி தண்ணீரைத் தனியாருக்குத் தாரைவார்த்தது; இப்படி இவர்கள் செய்த அநியாயங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.
கொங்கு மண்டலத்திற்கு நான்கு அமைச்சர்களை நியமித்திருக்கிறார்கள். அதில் ஒன்று வேலுமணி, அடுத்து தங்கமணி, அடுத்து உடுமலை ராதாகிருஷ்ணன், அடுத்தது பவானி கருப்பணன். இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. வேலுமணி வெளிப்படையாகக் கொள்ளையடிப்பார். தங்கமணி சைலண்டா கொள்ளையடிக்கக் கூடியவர். இவர்களது கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பாடம் புகட்டவும் திமுகவுக்கு வாக்களியுங்கள்.
1957ஆம் ஆண்டுமுதல் திமுக தேர்தல் களம் கண்டுவருகிறது. அன்றுமுதல் இன்றுவரை சொன்னதைத்தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். அதன்படி திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்தபின் 520 தேர்தல் அறிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளோம்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும், பெருந்துறை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
தமிழ்நாட்டில் மோடி மஸ்தான் வேலை எடுபடாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருணாச்சலம் படத்தில் கூறியதுபோல், தமிழ்நாட்டில் நடந்துவருகிறது. ‘ஸ்டாலின் சொல்றான் பழனிசாமி முடிக்கிறார்’. இந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
ஈரோட்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்
- ஈரோடு மேற்கு - சு. முத்துசாமி
- மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன்
- குமார பாளையம் - வெங்கடாசலம்
- ஈரோடு கிழக்கு - காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா
- பெருந்துறை- கொமதேக வேட்பாளர் கே.கே.சி. பாலு
இதையும் படிங்க:பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தால் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது - விஜய பிரபாகரன்