சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலைப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்துகொண்டார். பின்னர் பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சியின்போது 400 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மத்திய அரசின் ஆட்சியில் பொருளாதார சீர்கேடுகள் மற்றும் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்காமல் உள்ள நிலையும் ஏற்பட்டு தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு உள்ளது” எனக் கூறினார்.
மேலும், “மக்களிடையே மதத்தின் பெயர் கூறி பிரிவினைகளை ஏற்படுத்திடும் வகையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது போன்ற மாற்றங்களால் ஆளும் மோடி தலைமையிலான பாஜக சகாப்தம் முடிவுக்கு வரும். இவையனைத்திற்கு பாஜக உறுதுணையாக இருப்பதால், ஆளும் அதிமுக அரசு மதவெறி பிடித்த பாஜகவின் பி டீம் என்பது உண்மையாக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...ஈடிவி பாரத் ஊடகத்திற்கு விருது!