ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு பேசுகையில், ‘ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சத்தியமங்கலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்தாலும் அவர்களால் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது.
ஏனெனில் ஆட்சியில் இருப்பது அதிமுகதான். எங்கள் அரசுதான் அனைவருக்கும் நிதி ஒதுக்க வேண்டும். சத்தியமங்கலம் ஒன்றியத்திற்குக் குறைந்த நிதியே ஒதுக்கப்படும்’ என்றார். மேலும், அதிமுக ஆட்சியில் திமுகவினரால் என்ன செய்துவிட முடியும் எனவும், திமுக வெற்றி பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக சார்பில் யார் நிற்கிறார்கள் என்பதை பார்க்கக்கூடாது அங்கு இரட்டை இலை சின்னத்ததைதான் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், திமுகவினர் கோடி கோடியாக சொத்து சேர்த்துள்ளனர். அதேவேளையில் அதிமுக அரசு மக்களுக்கு அனைத்துவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், நடிகர் ரஜினி பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினி யாரையும் திட்டாத பண்பாளர் - ராகவா லாரன்ஸ்