ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வுற்ற பத்திரங்கள் வழங்கும் விழாவில் 223 பயனாளிகளுக்கு சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர், கோபிசெட்டிபாளையம் சட்டபேரவைத் தொகுதியில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் வைப்புத்தொகை நிதி ரூ.2 கோடி அளவில் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதைக் காட்டிலும் மக்களை நாடி பணிகள் ஆற்றிவரும் பாங்கு இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. பெண்கள் நலனுக்காக இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் 78 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாறு படைக்கும் வகையில் தமிழ்நாடு திகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றார்.
அரசுப் பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் போதிய அளவில் இல்லை என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ”76 கோடி ரூபாயில் கபாடி, கைப்பந்து, கிரிக்கெட் ஆகியவற்றை விளையாடுவதற்கு அங்காங்கே இடங்ளைத் தேர்வுசெய்து அதற்கான பொருள்களை வழங்கிவருகிறோம். 12,524 ஊராட்சி மன்றங்கள் 528 பேரூராட்சி மன்றங்களுக்கு இது வழங்கப்பட்டுவருகிறது” என அமைச்சர் பதிலளித்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட சமூகநல அலுவலர், வேளாண்மை துணை இயக்குநர், வருவாய்த் துறை அலுவலர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'திமுகவை ஸ்டாலின் நடத்தவில்லை; பிரசாந்த் கிஷோர்தான் நடத்துகிறார்' - அமைச்சர் காமராஜ்