ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வரிசையில் நின்று வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில்,
தேர்தல் முடிந்தவுடன் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வீட்டுவரி, குடிநீர் வரிகள் மறு பரிசீலனை செய்யப்படும். கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சரியாக 9.30 மணிக்கு வெளியிடப்படும். 2 நிமிடங்களில் மாணவர்களின் பெற்றோர்களில் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். ஆன்லைன் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் நல்ல முறையில் வெற்றிபெற்று மேல் படிப்பிற்கு செல்ல வாழ்த்துகிறேன். தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு உயர்நீதிமன்றமே பதில் அளிக்கவில்லை. ஆகவே நானும் பதிலளிக்க முடியாது. கல்விக்காக தனியாக தொலைக்காட்சி தொடங்கப்படும். மேலும், நூலகங்களை புதிதாக திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் உள்ள நூலகங்களில் அனைத்திலும் ஐ.ஏ.எஸ் அகாடமி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.