ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இருந்து முதல் போக பாசனத்துக்கு 2,300 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி அணையில் இருந்து 1 வது மைலில் உள்ள தங்கநகரம் கிளைவாய்க்காலில் மதகு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியதால் அங்குள்ள மண்கரை பாலம் சேதம் அடைந்தது.
இதன் காரணமாக கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பாசன வாய்க்காலுக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து உடைந்த கிளைவாய்க்காலை ஆய்வு செய்த நீர்வளத்துறை அதிகாரிகள் ரூ.30 லட்சம் செலவில் புதியதாக 8 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலத்தில் புதிய கான்கிரீட் கிளைவாய்க்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 1 வாரமாக பொக்லைன், ஜேசிபி இயந்திரம் மூலம் வாய்க்கால் பணிகள் நடைபெற்ற நிலையில், கட்டுமானப் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. இதனால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு கால தாமதம் ஆவதாகவும், இதனால் முதல்போக நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்படுவதாக வாய்க்கால் நீரை நம்பியுள்ள கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள் அரசிடம் முறையிட்டனர்.
இதையடுத்து செய்தி மக்கள் தொடர்புதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று உடைப்பு ஏற்பட்ட தங்கநகரம் கிளை வாய்க்கால் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். கட்டுமான பணிகளை விரைந்து முடித்து வாய்க்காலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
இரவு பகலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் ஒரிரு நாளில் பணிகள் நிறை பெறும் என்றும், பின்னர் கீழ்வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை!