ஈரோடு: சக்தி நகர் கூட்டுறவு நியாய விலை கடையில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.
ஈரோடு அருகே உள்ள சக்தி நகர் கூட்டுறவு நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (ஜனவரி 10) பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களுடன் 1000 ரூபாயும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “ஈரோடு மாவட்டத்தில் 7.68 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சக்கரை, கரும்பு மற்றும் 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது. தமிழக முழுவதும் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இத்தொகுப்பு இன்று (ஜனவரி 10) முதல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து முதலமைச்சர் அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என கூறியுள்ளார்.
இரண்டு நாள் சாதனை: தொடர்ந்து உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து அவர் பேசுகையில், “இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 31 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இது 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை உத்தரப்பிரதேசத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டை குறிப்பிட்டுள்ளார். அது பல ஆண்டுகளாக நடந்ததின் தொகுப்பு. ஆனால், தமிழகத்தில் நடந்தது இரண்டு நாள் சாதனையாகும். இது வெளிப்படையானது, இதில், உண்மையை மறைக்க எதுவும் இல்லை.
அத்திக்கடவு அவினாசி திட்ட பணி: அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இத்திட்டம் கமிஷனுக்காக நிறுத்தப்பட்டுள்ளது என கூறுவது உண்மை அல்ல. இந்த திட்டத்தின் கீழ் கம்போஸ் அமைய வேண்டிய இடம் அதற்கான பைப் லைன்கள் போன்றவற்றை முடிக்காமலேயே அதிமுக அரசு சென்று விட்டது.
அதை எல்லாம் சரி செய்து இப்போது திமுக ஆட்சியில் குளங்களுக்கு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. சில குளங்கள் தவிர மீதி அனைத்திலும் தண்ணீர் செல்கிறது. முழுமையாக பணி நிறைவுற்றவுடன் முதலமைச்சர் விரைவில் திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.
கோவையில் இருந்து சேலம் வழியாக பெங்களூரு கொண்டு செல்லும் கேஸ் பைப் லைன் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தாலும், விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்காமல் திட்டத்தை செயல்படுத்த அரசு உறுதியாக உள்ளது” என கூறியுள்ளார்.