ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் ஆலம் பவுண்டேசன் சார்பில் அரசு மருத்துவமனைக்குத் தேவையான கட்டில், மெத்தை, சக்கர நாற்காலி, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி கலந்து கொண்டு, தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த பொருட்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார். மேலும் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதுகுறித்து வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக 350 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் 300 படுக்கைகளை பத்து நாட்களுக்குள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம், பவானி, அந்தியூர் அரசு மருத்துவமனைகளில் நூறு முதல் இரு நூறு ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி ஆரம்பகட்ட கரோனா அறிகுறி உள்ளவர்களுக்குப் பள்ளி கல்லூரிகளில் 3 ஆயிரத்து 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்களுக்குக் கரோனா அறிகுறி இருந்தால் சிகிச்சைப் பெற்றுக் கொள்ள தாமாக முன்வர வேண்டும். சிகிச்சை முடியும் வரை அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் கறுப்புப் பூஞ்சை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டு பெருந்துறை மருத்துக்கல்லூரியில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தனியாக பத்து படுக்கைகளும், தேவையான மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’ என்றார்.
இதையும் படிங்க : பயன்படுத்தப்பட்ட மாஸ்க், பிபிஇ கிட்டுகள் கழுவி மீண்டும் விற்பனை: அதிர்ச்சி வீடியோ!