ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டாவது நாளான இன்று(அக்.30) அதிகாலை தாமரைகரை மலைக்கிராமத்தில் இருந்து எலச்சிபாளையம் கிராமம் வரை 15 கி.மீ., தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது ஈரெட்டி, கடைய ஈரெட்டி, தேவர்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் வழியாக செல்லும்போது, அங்கு வசிக்கும் கிராம மக்களிடையே குறைகளைக்கேட்டறிந்தார். மேலும் மக்களைத்தேடி மருத்துவத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
தேவர்மலை கிராமத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் ஆய்வுமேற்கொண்டார். அப்போது அங்குள்ள வசதிகள் குறித்தும், மருந்து இருப்புகள் குறித்தும் மருத்துவ உதவியாளர்களிடம் கேட்டறிந்தார். காலணிகள் இல்லாமல் சுற்றித்திரிந்த மாணவர்களைப் பார்த்த அமைச்சர் அவர்களுக்கு புதிய காலணிகளை வழங்கினார்.
எலச்சிபாளையம் கிராமத்தைச்சேர்ந்த சகோதரிகளான அபிதா(18), ஸ்நேகா(19) ஆகிய 2 பெண்கள் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வீட்டிற்குச்சென்ற அமைச்சர் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து சகோதரிகள் இருவருக்கும் உயர்சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அமைச்சர் அடர்ந்த வனப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டதன் காரணமாக, அதிரடிப்படை வீரர்கள் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம்!