ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தபாடியை அடுத்த ஓடத்துறையில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை உயர்மட்டத்தொட்டி, ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், வளையபாளையத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடங்களை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தொடர்ந்து வளையபாளைத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டப் பணியாளர்கள் தொடங்கியுள்ள மரக்கன்று நாற்றுப்பண்ணையை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், உதகையில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்படவில்லை, அப்படி இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக தரப்பு தொடர்ந்துள்ள வழக்கை திரும்ப பெற்றால், டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று கூறினார். ஸ்டாலின் கடந்த மக்களவை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து 38 எம்பிக்களை பெற்றுள்ளதாகவும், 38 எம்பிக்களால் மக்களுக்கு 38 பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இல்லை என்றும் விமர்சித்தார்.
பால்விலையை உயர்த்தியும் கட்டுப்படியாகவில்லை என பால் உற்பத்தியாளர்கள் கருத்தை தெரிவித்துள்ளதாக கூறிய அமைச்சர், முதலமைச்சர் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுப்பார் என்றும் குறிப்பிட்டார்.