ஈரோடு மவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கவுந்தப்பாடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் 524 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "சென்னையில் காற்று மாசு தற்போது 60 முதல் 70 ஆக குறைந்து விட்டது. தனியார் பாலில் மட்டுமல்ல எந்த பொருளில் கலப்படம் செய்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
காவரியாற்றில் மணல் திருடினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுகவை ஒருங்கிணைத்தது குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ள கருத்து, கட்சியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தவே அவ்வாறு கூறியுள்ளார். குழம்பிய குட்டையில் ஆதாயம் தேடும் அவரது முயற்சி நிறைவேறாது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெருவாரியாக வெற்றி பெறும்.
சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த அரசின் சார்பில் மானிய விலையில் வழங்கும் பெட்ரோல் மூலம் இயங்கும் இருசக்கர வாகனத்திற்கு பதிலாக எலெக்ட்ரிக் பைக் வழங்க முடியுமா என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'மகாராஷ்டிரா அரசியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்' - கே.எஸ் அழகிரி