தமிழ்நாட்டில் இ-பாஸ் முறையை ரத்து செய்யவேண்டுமென திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதேபோன்று மத்திய அரசு இ-பாஸ் முறையை மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டுமென அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் எட்டாவது ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டது.
அதில், நடைமுறையில் இருந்த இ-பாஸ் முறை தமிழ்நாட்டில் முற்றிலும் விலக்கிக்கொள்ளப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பால் தமிழ்நாடு மக்கள் மனம் குளிர்ந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வியாபாரிகள், வேலைக்குச் செல்வோர், தேவைக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் என அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த ஜவுளி வியாபாரிகள் மகிழ்ச்சி கலந்த நன்றியை தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜவுளி வியாபாரிகள் ஆண்டுதோறும் கோடைக்காலம், ரம்ஜான், ஆடி மாத பண்டிகைகள் மற்றும் குளிர் கால ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவது வழக்கம். இந்தாண்டு கரோனா ஊரடங்கால் மக்கள் வரத்து குறைந்து உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து வகை ஜவுளி ரகங்களும் தேங்கின. இதனால், விற்பனையும் பாதிப்புக்குள்ளாகி ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின் போதாவது இ-பாஸ் கட்டுப்பாட்டை ரத்து செய்திட வேண்டும் என்று கடந்த வாரம் தமிழ்நாடு அரசுக்கு சிறு, குறு ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அரசின் அறிவிப்பால் சிறு, குறு ஜவுளி வியாபாரிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் வெளிமாநில வியாபாரிகள் அருகாமை மாநிலங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுடன் அனுமதித்தால் தங்களது வியாபாரம் ஓரளவுக்கு மேலும் சிறப்படையும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 269 இந்தியர்கள் மீட்பு!