ஈரோடு கடைவீதி பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நேதாஜி தினசரி காய்கறிச் சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு 400க்கும் மேற்பட்ட காய்கறிகள், பழங்கள் விற்பனை கடைகள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் கரோனா ஊரடங்கால் தினசரி காய்கறிச் சந்தை தற்காலிகமாக பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
பின்னர் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் ஈரோடு நேதாஜி காய்கறிச் சந்தையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறிச் சந்தை ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் மாநகராட்சி ஒதுக்கிய இடத்தில் காய்கறிக் கடைகளும், பழக்கடைகளும் இயங்கி வந்தன.
இந்நிலையில், மழைக்காலத்தில் காய்கறிச் சந்தையில் தண்ணீர் தேங்கி பொதுமக்களும் காய்கறிச் சந்தைக்குள் வர முடியாத நிலையும், வியாபாரிகளும் தங்களது காய்கறிகளைக் கொண்டு வருவதில் சிரமப்பட்டனர். இதனால், நேதாஜி தினசரி காய்கறிச் சந்தையை பழையபடி மீண்டும் கடைவீதி பகுதிக்கே மாற்றிட வலியுறுத்தி காய்கறி வியாபாரிகள் ஒன்றாக திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் மாநகராட்சித் துறையினர், காய்கறி வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வியாபாரிகளின் போராட்டத்தால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: செமஸ்டருக்கான கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்!