ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 70 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந்துறையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் 69-பேரும் பூரணமாக குணமடைந்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக கடந்த 40-நாள்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாள்களாக புதியதாக யாருக்கும் நோய் தொற்று கண்டறியபடவில்லை. இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக இருந்த ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக ஈரோடு நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் என சுமார் 1000-க்கும் மேற்பட்ட, இருசக்கர வாகனம் பழுது நீக்கம் செய்யும் கடைகள், அதனை சார்ந்த எலட்ரீசியன், வாகன பெயின்டிங், வெல்டிங், லேத் ஒர்க் என 50-ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தை கொண்டு தங்களது வாழ்வாதாரம் இருந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடுமையாக பாதிக்கபட்டுள்ளதால் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் மையம் மற்றும் அதனை சார்ந்துள்ள கடைகளுக்கு காலை 6- மணி முதல் 10-மணி வரையில் கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.