ஈரோடு: திருவண்ணாமலையை சேர்ந்தவர் நாவப்பன். இவருக்கு திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரை சேர்ந்த பிரேம்குமார், பாரத் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களிடம் தன்னை ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி நாவப்பன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
நாளடைவில், அவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, அதற்கு பணம் அதிகம் தேவைப்படும் என்றும் அவ்வப்போது லட்சக் கணக்கில் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இருவரிடமும் தலா 8 லட்சம் ரூபாய் வீதம் 16 லட்சம் ரூபாய் வரை நாவப்பன் பணம் பெற்றதாக சொல்லப்படுகிறது.
பின்னர் பல நாட்கள் கடந்தும் நாவப்பனிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வராததால், தாங்கள் ஏமற்றமடைந்ததை உணர்ந்த பிரேம்குமார், பாரத் இருவரும் 2018-ல் ஈரோடு மாவட்ட குற்ற பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த நாவப்பனை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஐந்து ஆண்டு காலம் தலைமறைவாக இருந்த நாவப்பனை நேற்று (பிப். 3) போலீசார் கைது செய்தனர். மேலும் நாவப்பன் இது போன்று பலரை ஏமாற்றியதாகவும், அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.