ஈரோடு: சென்னிமலை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் 2013ஆம் ஆண்டு அப்பகுதியில் ஈமு பார்ம்ஸ் அமைத்துத் தருவதாகக் கூறி 140 பேரிடம் ரூ. 5.55 கோடி பணம் பெற்றுத் தலைமறைவானார்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் செல்வகுமாரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். அத்துடன் அவரைப் பிடிக்க ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுத் தேடிவந்தனர்.
இந்நிலையில் செல்வகுமார் சென்னிமலை வருவதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இன்று காலை அவரைக் கைதுசெய்து கோவை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ரவி 15 நாள்கள் செல்வகுமாருக்கு நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பித்தார். செல்வகுமார் கடந்த ஒன்பது ஆண்டுகளாகக் குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போலி சான்றிதழ் விவகாரம்: பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கைது!