மின்சாதனப் பொருள்கள் விற்பனை கடையில் திருட முயன்றவர் கைது! - காவல்துறை நடவடிக்கை
ஈரோடு: வீரப்பன்சத்திரம் அருகே தனியாருக்குச் சொந்தமான மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் வைக்கப்பட்டிருந்த பொருள்களைச் சேதப்படுத்திச் சென்ற நபரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகேயுள்ள பாரதி திரையரங்க வளாகத்தில் தனியாருக்குச் சொந்தமான வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்கள் விற்பனை நிலையமொன்று ஆறு ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 3 முறை நிறுவனத்தின் மேற்கூரையை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் இந்நிறுவனத்தில் வைக்கப்படும் ரொக்கப்பணத்தைக் கொள்ளையடித்துச் செல்வதாகவும், கடந்த சில நாள்களுக்கு முன் வழக்கம்போல் மேற்கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய நபர் கல்லாவை உடைத்து அதில் பணமில்லாததால், நிறுவனத்தில் நிறுவப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருள்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் துறையினருக்குப் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கடையின் உரிமையாளர் குற்றச்சாட்டை முன் வைத்தார். இதையறிந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் காவல் துறையினர், தனியார் நிறுவனத்தின் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கொள்ளையரைத் தேடிவந்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில், அந்நபர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணனைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க:'கடையில் பணம் இல்லை' - பேனர் வைக்கப்போவதாக உரிமையாளர் வேதனை!