கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் தனது குடும்பத்துடன் ஈரோட்டில் வீடு எடுத்து தங்கி ஈரோடு தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள காந்திஜி சாலையோரத்தில் வீடுகளுக்குத் தேவைப்படும் அம்மி, மாவரைக்கும் கல் உள்ளிட்ட கொத்துக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று மாலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென திரும்பி வந்து தான் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியால் விஜய்யை பலமாக குத்திக் காயப்படுத்தினார். இதனைச் சற்றும் எதிர்பாராத விஜயின் மனைவியின் அலறல் சப்தத்தைக் கேட்டு தீயணைப்பு நிலையத்தில் பாதுகாப்புக்கு இருந்த தீயணைப்புத்துறை வீரர் உடனடியாக விரைந்து வந்து கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்தவரை வளைத்துப் பிடித்தனர்.
இதனையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த காவல்துறையினர் கத்தியால் குத்திக் காயப்படுத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விஜய்யை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கத்தியால் குத்திய இளைஞரை காவல்நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞர் பெரியார் நகர்ப் பகுதியைச் சேர்ந்த குணா என்பதும், அவர் மீது இதுபோல் ஏற்கெனவே பலரையும் கொலை செய்ய முயற்சித்த வழக்குகள் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சாலையோர வியாபாரியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.